தூத்துக்குடியில் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு ஊர்வலம்: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு ஊர்வலம்: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
விழிப்புணர்வு ஊர்வலம்
தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் பழைய மாநகராட்சி அலுவலகம், வ.உ.சி. சாலை, கடற்கரை சாலை வழியாக முத்துநகர் கடற்கரையில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் 'தமிழ் எங்கள் பிறவித்தாய்' 'இன்றும் தமிழ் என்றும் தமிழ்' 'தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்' 'தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்' என்பன பல்வேறு வாசகங்களை அடங்கிய பாதாகைகளை மாணவ, மாணவிகள் எடுத்துச் சென்றனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
இந்த ஊர்வல தொடக்க நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மயிலேறும் பெருமாள், ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புகைப்பட கண்காட்சி
இதன் தொடர்ச்சியாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நாள் குறித்த புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் க. அன்பழகன் தொடங்கி வைத்தார். மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம்
மேலும், கோவில்பட்டி காந்தி மைதானத்தில் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர தி.மு.க.செயலாளரும், நகரசபை தலைவருமான கா. கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், சின்னப்பாண்டியன், முருகேசன், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்பராஜ், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணை தலைவர் மகாலட்சுமி கே.சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் ராமர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், பா.ஜ.கவினர் தி.மு.க.விற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
பழைய திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய பெயரை தான் சூட்டியுள்ளது. புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தமிழகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி முதலீட்டை முதல்-அமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.
முதல்-அமைச்சர் அறிவித்துள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதை தாங்கி கொள்ளமுடியாமல் எதிர்கட்சியினர் பொறாமையில் குறைகூறி வருகின்றனர். மத்திய அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. சமையல் எரிவாயு மானியம் வழங்கவில்லை. அதன் விலையை குறைக்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை.
நூறுநாள் வேலைத்திட்ட நிதி குறைப்பு
சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினால் உயர்த்தி வருகின்றனர். கல்வி கடன் பெற்றவர்களை விரட்டி விரட்டி பணத்தை வசூலிக்கின்றனர். கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய தி.மு.க. வலியுறுத்தியும் செய்யவில்லை. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. சுங்கச்சாவடி கட்டணம், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் விலைவாசி குறையும். பொது சிவில் சட்டம் கொண்டு வர பா.ஜ.க. முயற்சி செய்கிறது. நூறுநாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவினர் நோட்டாவை விட கூடுதல் ஓட்டுகள் வாங்குவார்களா? என்று பார்ப்போம். எத்தகைய நெருக்கடியை கொடுத்தாலும் தி.மு.க.விற்கு மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை' என்றார்.
நான் முதல்வன்
இதேபோன்று, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 'உயர்வுக்கு படி' மற்றும் 'கல்லூரி கனவு' வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, 'உயர்வுக்கு படி' திட்டத்தில் நேரடி தேர்வு பெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கு ஆணைகள் மற்றும் புத்தகங்களையும், 'உயர்வுக்கு படி' திட்டத்தில் கல்வி பயிலும் 15 மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடனும் வழங்கி பேசினார்.
அப்போது, மாணவர்களுக்கு கல்லூரி பருவம் தான் மிகவும் இனிமையான பருவமாகும். இந்த காலம் மீண்டும் திரும்ப வராது. எனவே, மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் அறிவாற்றலை, சிந்தனை திறனை, முடிவெடுக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தொழில் நிறுவனங்கள் கேட்கும் தகுதிகளை, திறன்களை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும். அதற்காக தான் நான் முதல்வன், கல்லூரி கனவு, உயர்வுக்கு படி போன்ற திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதுமட்டுமல்ல அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டத்தையும் முதல்-அமைச்சர் கொண்டு வந்து உள்ளார். புதுமை பெண் திட்டத்தில் இதுவரை 4 லட்சம் மாணவிகள் இணைந்து உள்ளனர். இந்த ஆண்டு புதிதாக 2½ லட்சத்துக்கு மேற்பட்ட மாணவிகள் இந்த திட்டத்தில் இணைய வாய்ப்புள்ளது.
செய்தித்தாள்களை...
இதேபோன்று அரசு ஐ.டி.ஐ-க்களில் பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஐ.டி.ஐ-க்கும் ரூ.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே, மாணவர்கள் மனது வைத்தால் நிச்சயம் சாதிக்க முடியும், நல்ல புத்தகங்களை, செய்தித் தாள்களை படிக்க வேண்டும். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். மதிப்பெண் மட்டும் முக்கியம் இல்லை. நம்பிக்கை இருந்தால் வானம் கூட வசப்படும் என்று கூறினார்.
பணிநியமன ஆணை
நிகழ்ச்சியில் பணியின் போது இறந்து போன சத்துணவு பணியாளர்களின் வாரிசுகள் 9 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள், புதுமை பெண் திட்ட விளக்க கையேடுகள் மற்றும் சிறந்த கல்லூரிகளுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரபு, மாவட்ட சமூகநலத்துறை அலுவர் ரதிதேவி, வ.உ.சி கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.