தூத்துக்குடியில் இரவு நேர விமான சேவை தொடங்குவது எப்போது?: விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன்
தூத்துக்குடியில் இரவு நேர விமான சேவை தொடங்குவது எப்போது? என்பது குறித்து விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த கப்பல் முகவர்கள் சங்க பவளவிழாவில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் என்.சுப்பிரமணியன் பேசும் போது, தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய பயணிகள் முனையம், விமான ஓடுதள விரிவாக்கம், இரவு நேர விமான சேவைக்கான பணிகள் போன்றவை நடந்து வருகின்றன. தற்போது தினமும் 5 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. புதிய விமான சேவைகளை தொடங்க விமான நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். விரிவாக்க பணிகள் முடிவடையும் போது, பெரிய விமானங்கள் இயக்க முடியும்.
புதிய பயணிகள் முனையம் கட்டுமான பணிகள் முடிந்ததும், பழைய பயணிகள் முனையம் சரக்கு முனையமாக மாற்றப்படும். வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து விமான நிலையத்துக்கு தனி குடிநீர் திட்டம் ரூ.11 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இரவுநேர விமான சேவைக்கான பணிகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடைந்து விடும். அதுபோல வல்லநாடு மலையில் சிக்னல் டவர் அமைப்பதற்கான பணிகள் 2 மாதங்களில் முடியும். இந்த பணிகள் முடியும் போது இரவு நேர விமான சேவை தொடங்கப்படும் என்று கூறினார்.