தூத்துக்குடியில்தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
தூத்துக்குடியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.
திருட்டு
தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்தவர் சந்தானராஜ். இவருடைய மகன் ரமேஷ் கண்ணன் (வயது 45). இவர் கடந்த 8-ந் தேதி தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்த போது, யாரோ மர்ம நபர் அவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ்கண்ணன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோன்று டூவிபுரத்தை சேர்ந்த ராஜ்மோகன் (40) என்பவர் மோட்டார் சைக்கிளும் திருடு போனது. இதுதொடர்பாக மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாயர்புரம் சிவத்தையாபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் மகன் நித்தின் விக்னேஷ் (22) என்பவர் தூத்துக்குடி குறிஞ்சிநகரில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தாராம். அதேபோன்று எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த அஜய்குமார் விசுவகர்மா (28) என்பவர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தாராம். இந்த மோட்டார் சைக்கிள்களை யாரோ மர்ம நபர் திருடி சென்று விட்டாராம். இதுகுறித்த புகார்களின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
இந்த நிலையில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போன பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, கோவில்பட்டி கூசாலிபட்டியை சேர்ந்த செல்லத்துரை பாண்டியன் மகன் ராமர் (31) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் ராமரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ராமர் மீது ஏற்கனவே 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.