தூத்துக்குடி யூனியன் பகுதியில்அரசு வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்:கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்
தூத்துக்குடி யூனியன் பகுதியில் அரசு வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி யூனியன் பகுதியில் அரசு வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்ட வளர்ச்சி பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நேற்று தூத்துக்குடி யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
அய்யனடைப்பு பஞ்சாயத்து சோரீஸ்புரம் யூனியன் நடுநிலைப்பள்ளியில் ரூ.27 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடங்கள், மறவன்மடம் பஞ்சாயத்து திரவியபுரத்தில் ரூ.8 லட்சம் செலவில் குளம் தூர்வாரும் பணி, ராமச்சந்திராபுரத்தில் ரூ.8 லட்சம் செலவில் வரத்துகால்வாய் தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விரைந்து முடிக்க..
ஆய்வின் போது, தமிழக முதல்-அமைச்சர் கிராம பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்த அறிவுறுத்தி உள்ளார். அதன்படி பல்வேறு கிராமங்களில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் அனைத்தையும் தரமாக விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் யூனியன் பகுதியில் நடைபெறும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சிவராணி, உதவி செயற்பொறியாளர் அமலா, தாசில்தார்கள் பிரபாகரன் (தூத்துக்குடி), சுரேஷ் (ஓட்டப்பிடாரம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தூத்துக்குடி ஹெலன் பொன்மணி, வசந்தா, ஓட்டப்பிடாரம் சிவபாலன், ராமராஜன் மற்றும் பொறியாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம்
இதேபோன்று ஓட்டப்பிடாரம் யூனியனுக்கு உட்பட்ட குலசேகரநல்லூர் கிராமத்தில் ரூ.33.80 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டுமான பணிகள், முறம்பன் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.46.20 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டுமான பணிகள், ஓட்டப்பிடாரம் - கல்லத்திகிணறு ரூ.57.05 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள், ஒட்டநத்தம் - கல்லத்திகிணறு சாலையில் ரூ.269 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணிகள், சொக்கநாதபுரம் கிராமத்தில் யூனியன் தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் சமையலறை கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டறிந்தார். தொடர்ந்து ஒட்டநத்தம் கிராமத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் அனைத்து ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அப்போது கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் சிவராணி, உதவி செயற்பொறியாளர் அமலா, ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் சிவபாலன், கூடுதல் ஆணையாளர் ராம்ராஜ் உட்பட உதவி பொறியாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உடன் இருந்தனர்.