வேதாரண்யம் பகுதியில், பூத்துக்குலுங்கும் மாமரங்கள்


வேதாரண்யம் பகுதியில், பூத்துக்குலுங்கும் மாமரங்கள்
x

வேதாரண்யம் பகுதியில் மாமரங்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் மாமரங்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

வேதாரண்யத்தில் மா சாகுபடி

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நெல், சவுக்கு, முந்திரி பயிர்களுக்கு அடுத்தபடியாக மா சாகுபடி பரவலாக நடந்து வருகிறது. இந்த பகுதியில் மா சாகுபடிக்கு ஏற்ற நிலப்பரப்பு உள்ளது. வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலம், நெய்விளக்கு, கரியாப்பட்டினம், குரவப்புலம், கத்தரிப்புலம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி நடந்து வருகிறது.

மா சாகுபடிக்கு ஏற்ற மண்வளம் உள்ளதால் ருமேனியா, மல்கோவா, பெங்களூரா, செந்தூரா, ஒட்டு, நீலம் என 15-க்கும் மேற்பட்ட ரக மாமரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு விளையும் மாம்பழங்கள் உள்ளூர் மார்க்கெட் தவிர மாம்பழ கூழ் தொழிற்சாலைக்கும் அனுப்பப்படுகிறது. மேலும் விற்பனைக்காக சேலம், மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

பூத்துக்குலுங்கும் மாமரங்கள்

கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்தது. இதனால் வேதாரண்யம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, மாமரங்களுக்கு ஏற்ற சூழல் நிலவி வருகிறது. வழக்கமாக வேதாரண்யம் பகுதிகளில் மாமரங்கள் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பூ பூக்கும். இந்த மாதங்களில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு இருக்கும். இதனால் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் கருகி விழுவதும் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு தற்போது மாமரங்களில் மாம்பூ பூத்துக்குலுங்கி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. பார்ப்பவர்கள் கண்களை கவரும் வகையில் இந்த பூக்கள் காட்சி அளிக்கின்றன.

விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு

இதுகுறித்து மா விவசாயிகள் கூறுகையில், 'இந்த ஆண்டு பனியால் பூக்கள் உதிர்வது குறைவாக இருக்கிறது. தற்போது கோடை காலம்போல வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால் வெப்பத்தால் பிஞ்சுகள் உதிர்வு அதிகமாக இருக்கும். இருந்த போதிலும் பூக்கள் அதிகமாக உள்ளதால் மரங்களில் அதிகமாகவே பிஞ்சு விட தொடங்கி உள்ளது. இதனால் நடப்பாண்டில் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டுகளை போல இல்லாமல் இந்த ஆண்டு மா மரங்களில் அதிகமான பூக்கள் பூத்திருக்கிறது.

லாபம் இல்லை

வேதாரண்யம் பகுதியில் மா சம்பந்தப்பட்ட தொழிற்சாலை இல்லை. இதனால் இடைத்தரகர்கள் மூலம் குத்தகைக்கு விடப்பட்டு, வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு மாம்பழங்களை எடுத்து செல்கின்றனர்.

இதனால் இடைத்தரகர்களுக்கு லாபமே தவிர முழுமையான லாபம் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை' என்றனர்.


Next Story