கிராம சபை கூட்டங்களில் அரசு பணியாளர் குறைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி
கிராம சபை கூட்டங்களில் அரசு பணியாளர் குறைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காந்தி ஜெயந்தியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களுக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும். சமூக ஆய்வு என்று கூறப்படும் இந்த ஆய்வில் ஊராட்சி நிர்வாகம், ரேஷன் கடை நிர்வாக பணிகளும் உட்படுத்தப்படுகிறது. இதை வரவேற்கும் அதே நேரத்தில், ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்கள் வந்துள்ளதா? என்றும், கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை செய்ய நிர்பந்தம் செய்யப்படுகிறதா என்றும் ஆய்வு செய்ய வேண்டும். ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் ஆகியோருக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்ய வேண்டும். அரசு பணியாளர்களின் குறைகளை ஆய்வு செய்ய வேண்டியதும் பொதுமக்களின் பொறுப்பு தான். அப்போது தான் இந்த சேவை முழுமை பெறும் என்றார். அப்போது மாநில பொருளாளர் சரவணன், நிர்வாகி அல்லிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.