விழுப்புரத்தில்வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் அபாய சங்கிலியை பயணிகள் இழுத்ததால் பரபரப்பு


விழுப்புரத்தில்வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் அபாய சங்கிலியை பயணிகள் இழுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் அபாய சங்கிலியை பயணிகள் இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு தினமும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 3.50 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அந்த ரெயிலின் முன்பதிவு பெட்டியில் முன்பதிவு அல்லாத பயணச்சீட்டு எடுத்த பயணிகள் பலர், விழுப்புரத்தில் ஏறினர். இதனால் முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் கூட்டநெரிசல் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதுபற்றி அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு அவர்கள் சற்று பொறுத்துக்கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. இதனிடையே அந்த ரெயில் மாலை 4 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். உடனே நடைமேடையிலேயே அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பயணிகள், தங்களுக்கு இடையூறு இருப்பதாக கூறி மற்ற பயணிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் ரெயில் நிலைய அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உள்ளே அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மாலை 4.15 மணிக்கு அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story