விளாத்திகுளம் தொகுதியில்ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் குறித்து ஆலோசனை
விளாத்திகுளம் தொகுதியில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் தொகுதியில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் குறித்து கிராம மக்களுடன் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினா்.
ஆலோசனை கூட்டம்
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் புதூர் யூனியன் மணியக்காரன்பட்டி ஊராட்சி தவசலிங்கபுரம், மணியக்காரன்பட்டி, சக்கனாபுரம் ஆகிய கிராமங்களில் நடந்தது. இக் கூட்டங்களில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, கிராமங்களில் வேம்பு, புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்தும், இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்தும் கிராம மக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், தனது சொந்த நிதியிலிருந்து 7 அடி உயர மரக்கன்றுகளும், அவற்றைப் பாதுகாப்பதற்கான வலைகளும் வழங்குவதாக கிராம மக்களிடம் உறுதியளித்தார். இந்தகூட்டங்களில் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஊராட்சி மன்ற தலைவர் நாகராணி உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் எட்டயபுரம் பேரூராட்சி சார்பாக எட்டயபுரம் நகர் பகுதியில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை எம்.எல்.ஏ. பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், கோவில்பட்டி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வகுப்பறை கட்டிடம் ஆய்வு
மேலும், ஓட்டப்பிடாரம் அருகே மிளகுநத்தம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிடங்களை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது பணிகளை துரிதப்படுத்தி தரமான முறையில் கட்டுவதற்கு யூனியன் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் துணை தலைவர் காசிவிஸ்வநாதன், எப்போதும்வென்றான் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.