விளாத்திகுளத்தில் மயான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விளாத்திகுளத்தில் மயான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு சிதம்பர நகர் பொதுமக்கள் நேற்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், சிதம்பர நகர் பகுதியில் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த பாதையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதை தொடர்ந்து நேற்று எம்.எல்.ஏ. அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது மயானம் செல்லும் பாதையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தற்காலிக பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும'் என்று கூறினார். இந்த ஆய்வின் போது விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, பேரூராட்சி கவுன்சிலர் செல்வகுமார் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து விளாத்திகுளம் சிதம்பரநகரை சேர்ந்த பனையேறும் தொழிலாளி சின்ன முருகன் என்பவர் நேற்று முன்தினம் பனையில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்தார். அவரது இல்லத்திற்கு எம்.எல்.ஏ. நேரில் சென்று நலம் விசாரித்து உதவி தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.