விளாத்திகுளத்தில் பேரூராட்சி பெண் தொழிலாளிதீக்குளித்து தற்கொலை
விளாத்திகுளத்தில் பேரூராட்சி பெண் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் குடும்ப பிரச்சினையில் பேரூராட்சி ஒப்பந்த பெண் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பேரூராட்சி தொழிலாளி
விளாத்திகுளம் சத்யா நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி (வயது 43). இவர்களுக்கு பிரவீன் என்ற மகனும், 18 வயதுடைய மகளும் உள்ளனர். இதில் பிரவீன் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூரில் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் முத்துகிருஷ்ணன் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதனால் மகளுடன் விஜயலட்சுமி விளாத்திகுளத்திலுள்ள வீட்டில் வசித்து வந்தார். மேலும், இவர் விளாத்திகுளம் பேரூராட்சியில் மருந்து தெளிக்கும் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
மகளுடன் பிரச்சினை
இவரது மகள் கோவில்பட்டியிலுள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்துள்ளார். வீட்டு வேலைகளை செய்வதில் விஜயலட்சுமிக்கும், அவரது மகளுக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் மாலையிலும் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த மகளுக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே வீட்டு வேலை செய்வது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த விஜயலட்சுமி திடீரென்று வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் அவர் அலறியுள்ளார். இதற்கிடையில் தாய் தீக்குளித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகளும் கதறி அழுதுள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து பலத்த காயங்களுடன் விஜயலட்சுமியை மீட்டனர்.
சாவு
உடனடியாக அவரை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்