விளாத்திகுளத்தில்வெறிநாய் கடித்து 4ஆடுகள் பலி
விளாத்திகுளத்தில் வெறிநாய் கடித்து 4ஆடுகள் பலியாகி உள்ளன.
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் நேற்று வெறிநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் பரிதாபமாக பலியாகியுள்ளன. இப்பகுதியில் தொடரும் இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
ஆடுகள் பலி
விளாத்திகுளம் 13-வது வார்டு பகுதியைச் சேர்ந்த அங்குமுத்து மகன் முனியசாமி (வயது 63). இவர் சாலைப் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது வீடு அருகில் சிறிய கொட்டகை அமைத்து 5 ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலையில் இவரது ஆட்டுக் கொட்டகையில் இருந்து ஆடுகளின் கதறல் சத்தம்கேட்டுள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பதறி அடித்து கொண்டு முனியசாமி ஆட்டுக் கொட்டகைக்கு விரைந்து சென்று பார்த்தார்.
இங்கு கொட்டைகையில் இருந்த 4 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறி கொன்று விட்டு சென்றது தெரிந்தது. அந்த ஆடுகள் உடல் குதறப்பட்டு இறந்து கிடந்தை பார்த்த அவர் கதறி அழுதார்.
தொடரும் சம்பவம்
இதுகுறித்து அவர் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் புகார் தெரிவித்தார். அந்த அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் பேரூராட்சி அலுவலர்கள் இறந்த ஆடுகளின் உடல்களை கைப்பற்றி ஊருக்கு அருகில் புதைத்தனர். ஏற்கனவை விளாத்திகுளம் பகுதியில் வெறிநாய்கள் கடித்து 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலரையும் வெறிநாய்கள் கடித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
இப்பகுதியில் வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருவது விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. தொடரும் வெறிநாய் பிரச்சினைக்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைவில் தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.