விளாத்திகுளத்தில் வெறிநாய் கடித்து 6 ஆடுகள் பலி
விளாத்திகுளத்தில் வெறிநாய் கடித்து 6 ஆடுகள் பலியாகின.
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் ஆட்டுக்கொட்டகையில் புகுந்து வெறிநாய் கடித்ததில் 6 ஆடுகள் பலியாகின.
ஆடுகள் வளர்ப்பு
விளாத்திகுளம் பாரதி தெருவைச் சேர்ந்த குழந்தைவேல் என்பவரின் மகன் வேல்முருகன் ஆடுகள் வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு ஆடுகளை ஆட்டுக்கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார். நேற்று காலையில் மேய்ச்சலுக்கு ஆடுகளைக் கூட்டிச் செல்ல கொட்டகையில் சென்று பார்த்தபோது, 6 ஆடுகளும் வெறி நாய்கள் கடித்து ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்துள்ளன.
அதிகாரிகளிடம் புகார்
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் விளாத்திகுளம் பேரூராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். உடனடியாக ஆட்டுக்கொட்டகைக்குச் சென்ற பேரூராட்சி அதிகாரிகள் நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்பு வேல்முருகன் வளர்த்து வந்த 2 ஆடுகள் வெறிநாய்க்கடித்து இறந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஒரு வார காலமாகவே இப்பகுதியில் வெறிநாய்கள் கடித்து பல ஆடுகள் மற்றும் கன்று குட்டிகள் பலியாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கோரிக்கை
விளாத்திகுளம் பகுதியில் அதிக அளவில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் பேரூராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.