தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் விஷ்ணு தகவல்


தொழிற்பயிற்சி நிலையங்களில்   மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் விஷ்ணு தகவல்
x

நெல்லை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தொழிற்பயிற்சி நிலையம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் தொழிற்பயிற்சி நிலையயங்களில் (ஐ.டி.ஐ.) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2022-ம் ஆண்டிற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் பேட்டை, அம்பை, ராதாபுரம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் ஆகியவற்றை அணுகி விண்ணப்பிக்கலாம்.

தகுதி விவரங்கள் இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் எந்த பாகுபாடு இல்லாமல் மாதம் ரூ.750 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

பாடப்புத்தகங்கள்

மேலும் இலவச மடிக்கணினி, இலவச சைக்கிள், சீருடைகள், ஒரு ஜோடி செருப்பு, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்ல இலவச பஸ் பாஸ் மற்றும் சலுகை கட்டணத்தில் ரெயில் பாஸ் வழங்கப்படும்.

10-ம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ. தொழில் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழி பாடங்கள் (ஆங்கிலம், தமிழ்) மட்டும் எழுதி பிளஸ்-2 சான்றிதழ் பெறலாம். இதேபோல் 8-ம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ. தொழில் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிபாடங்கள் (தமிழ் ஆங்கிலம்) மட்டும் எழுதி எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் பெறலாம்.

மின்கம்பி உதவியாளர்

மேலும் பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் செப்டம்பர் மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் வயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை ஆர்வம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். இந்த தேர்வுக்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்புகளைhttps://skilltraining.tn.gov.in/DET என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இணைப்புகளுடன் ஜூலை மாதம் 26-ம் தேதிக்குள் பேட்டை அரசு ஐ.டிஐ.க்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story