ஏலகிரிமலை ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்


ஏலகிரிமலை ஊராட்சியில்  வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
x

ஏலகிரிமலை ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை,

ஏலகிரிமலை ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

ஏலகிரிமலை ஊராட்சி யாத்திரி நிவாஸ் கூட்டரங்கில் ஏலகிரிமலை ஊராட்சியினை மேம்படுத்தும் வளர்ச்சிப்பணிகள் குறித்து திட்டமிடலுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

ஏலகிரிமலை ஊராட்சிக்குட்பட்ட 14 குக்கிராமங்களில் குடிநீர் வசதி, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபர்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும்.

அடிப்படை வசதிகள்

ஏலகிரிமலை படகு இல்லத்தை சுற்றி நடைபாதை, குடிநீர் வசதிகள், பொது மக்கள் அமருமிடம், கேன்டின், மின் விளக்குகள், கழிவறைகள. இயற்கை பூங்கா ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர நீர்வரத்து கால்வாய்களில் கசிவு நீர்குட்டைகள் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் இப்பகுதியில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளுக்கு தேவையான கட்டிடங்கள், குடிநீர் வசதிகள், சமையல் அறைகள், மின்சார வசதிகள், அங்கன்வாடி கட்டிடம், சுற்றுச்சுவர் ஆகிய அடிப்படை வசதி தேவைகள் குறித்து கருத்துரு உடனடியாக தயார்செய்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, பழங்குடியினர் நலத்துறை, தோட்டக்கலை துறை ஆகிய துறைகள் இப்பகுதி வளர்ச்சிக்காக கருத்துரு தயார்செய்து அனுப்பப்பட வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த ஏலகிரிமலை ஊராட்சியை மேம்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உள்ளாட்சி பிரதிநிதிகள்

கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முரளி, வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன், தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், ஊராட்சி மன்ற தலைவர் இராஜஸ்ரீ கிரிவேலன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story