புதிய கலெக்டராக தீபக் ஜேக்கப் பதவியேற்பு


புதிய கலெக்டராக தீபக் ஜேக்கப் பதவியேற்பு
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டராக தீபக் ஜேக்கப் பதவியேற்று கொண்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டராக தீபக் ஜேக்கப் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

புதிய கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஜெயசந்திரபானுரெட்டி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் செயல் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்று கொண்டார்.

இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 12-வது கலெக்டர் ஆவார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆகும். ஐ.ஏ.எஸ். அதிகாரி தீபக் ஜேக்கப், பி.டெக் படித்துள்ளார். கடந்த 2016-2017-ல் தூத்துக்குடி மாவட்ட உதவி கலெக்டராக பணியாற்றினார். பின்னர் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார்.

ஒத்துழைப்பு

இதன் பின்னர் தேர்தல் ஆணையத்தில் இணை முதன்மை அலுவலராகவும், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனராகவும் இவர் பணியாற்றினார். தற்போது தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த இவர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

புதிய மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தொழில் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கலெக்டராக நான் பொறுப்பேற்றுள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும், பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்த்து வைப்பதிலும் அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக பதவியேற்றுக் கொண்ட, தீபக் ஜேக்கப்பிற்கு முன்னாள் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story