ரூ.13¾ கோடியில் பக்தர்கள் வரிசை மண்டபம் திறப்பு


ரூ.13¾ கோடியில் பக்தர்கள் வரிசை மண்டபம் திறப்பு
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.13¾ கோடியில் கட்டப்பட்ட பக்தர்கள் வரிசை மண்டபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம்திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அந்த மண்டபம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.13¾ கோடியில் கட்டப்பட்ட பக்தர்கள் வரிசை மண்டபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம்திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அந்த மண்டபம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

பக்தர்கள் வரிசை மண்டபம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதைத்தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக இக்கோவிலில் ரூ.13 கோடியே 80 லட்சத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய பக்தர்கள் வரிசை மண்டபம், நான்கு காத்திருக்கும் கூடம், பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் கிரானைட் கற்களாலான இருக்கைகள், கோவில் பயன்பாட்டிற்கான 8 கடைகள்- தேங்காய் பழ கடை, வெள்ளி உருவார விற்பனை நிலையம், குங்குமம் விற்பனை நிலையம், பிரசாத விற்பனை நிலையம், கட்டண சீட்டு விற்பனை மையம், புத்தக விற்பனை நிலையம், எஸ். எஸ். தடுப்புகள், மின்விளக்குகள், மின்விசிறிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கென 12 கழிவறைகள், பொருட்கள் வைப்பு அறை, நான்கு அவசர கால வழிகள், வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

வரிசை வளாகத்திற்கு வெளியே பொருட்கள் பாதுகாப்பு அறை, ஓட்டுநர் ஓய்வு அறைகள், பாதுகாவலர் கண்காணிப்பு அறை, உணவகம், காலணிகள் பாதுகாப்பு மையம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறம் பூஜை பொருட்கள் மற்றும் சேவார்த்திகளுக்கு பயன்படக்கூடிய பொருட்கள் விற்பனை செய்ய 16 கடைகள் கட்டப்பட்டுள்ளது.

சுமார் 77 ஆயிரம் சதுர அடியில் பேவர் பிளாக் கற்களை கொண்டு அமைக்கப்பட்ட இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடமும் கட்டப்பட்டுள்ளது.

இவைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி சமயபுரம் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று பக்தர்கள் வரிசை மண்டபம் வழியாக சென்றனர்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்துக்கு புதிய கட்டிடம்

இதேபோல் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கட்டிடம் எதிரே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒருங்கிணைந்த அலுவலக வளாக கட்டிடம் ரூ.7 கோடியே 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி புதிய கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப் குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து கட்டிடத்தை பார்வையிட்டார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதரணி உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இந்த புதிய கட்டிட வளாகத்தில் மின் தூக்கு வசதியுடன் 2 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தரைதளம் 2027.77 சதுரமீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் மகளிர் திட்ட இயக்குனர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அறை மற்றும் 180 இருக்கைகளுடன் கூடிய கூட்ட அரங்கு ஆகியவை உள்ளது.முதல் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மற்றும் காணொளி அறை உள்ளது.

ராஜகோபுரம் வழியாக செல்ல அனுமதி

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோபுரம் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து இந்த வழியாக சென்று அம்மனை தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், நேற்று பக்தர்கள் வரிசை மண்டபம் திறக்கப்பட்டது. இந்த மண்டபம் வழியாக வரிசையில் வரும் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்று அம்மனை வணங்கிய பின், மூலஸ்தான விநாயகரை வணங்கி அதைத்தொடர்ந்து உற்சவர் அம்மன் சன்னதி, கருப்பண்ணசாமியை வணங்கிய பிறகு ராஜகோபுரம் வழியாக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த தகவலை கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக மகிழ்ச்சியுடன் சென்றனர்.


Next Story