ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல்-குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு


ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல்-குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல்-குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி திறந்து வைத்தார்

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி திறந்து வைத்தார்.

நீதிமன்றம் திறப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி தலைமை தாங்கி புதிய நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். பின்னர் ஓட்டப்பிடாரத்தில் புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவராக ஜெயந்தி பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அன்றைய தேதியில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி கூறியதாவது:-

வ.உ.சிதம்பரானார் அந்த காலத்தில் ஓட்டப்பிடாரத்திலே வழக்கறிஞராக செயல்பட்டுள்ளார். அவர் காலத்தின் பிறகு கோவில்பட்டிக்கு மாறுதலாகி சென்றது. மீண்டும் ஓட்டப்பிடாரத்தில் சிறப்பாக செயல்பட உள்ளது. இந்த நீதிமன்றத்தில் சுமார் 1500 குற்றவியல் வழக்குகளும், சுமார் 300 உரிமையில் வழக்குகளும் மாற்றம் செய்யப்பட உள்ளது. 15 பணியாளர்கள் உள்ளனர்.

சிறப்பாக செயல்பட வேண்டும்

தற்சமயம் தனியார் கட்டிடத்திலே தொடங்கப்பட்டுள்ளது. விரைவிலே சொந்த கட்டிடத்திலே தொடங்கப்படும். இங்குள்ள மக்கள் கோவில்பட்டி, விளாத்திகுளம், தூத்துக்குடி நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இங்கே நீதி கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. இந்த நீதிமன்றமானது பொதுமக்களின் நம்பிக்கையை பெற்று சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்களும், பொதுமக்களும் மிகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

இவ்வாறு மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி கூறினார்.

தொடர்ந்து ஓட்டப்பிடாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு ஓட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டி பகுதியில் அரசு கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி, கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் முதன்மை நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு செல்வகுமார், மாவட்ட சட்ட உதவி மையம் செயலர் பிரீத்தா, ஓட்டப்பிடாரம் புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் ஜெயந்தி, தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு சதீஷ், தூத்துக்குடி பார் அசோசியேஷன் தலைவர் ஜோசப் செங்குட்டுவன், மேம்பாட்டு கழக நிறுவன தலைவர் வக்கீல் அதிசயக்குமார், மூத்த வழக்கறிஞர் கனகராஜ், அரசு வழக்கறிஞர் பூங்குமார், ஓட்டப்பிடாரம் வக்கீல் சங்க தலைவர் ஜெகதீசன், செயலாளர் மரகதவேல், பொருளாளர் ராஜேஷ், துணைத் தலைவர் லாரன்ஸ், துணை செயலாளர் நல்லதம்பி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார் உட்பட வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story