சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் ெசார்க்கவாசல் திறப்பு


சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் ெசார்க்கவாசல் திறப்பு
x

திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பழமை வாய்ந்த சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

முன்னதாக 1-ந் தேதி மாலை 5 மணி அளவில் ஆழ்வார் மோட்சம் நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் மோகினி அவதாரம், திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இன்று அதிகாலை 3 மணி அளவில் திருப்பள்ளி எழுச்சியும் திருப்பாவை சேவா காலமும் நடைபெற்றது. 3.30 மணி அளவில் ஆனந்த சயனம் அலங்காரம் நடைபெற்றது. 4 மணி அளவில் விஸ்வரூப தரிசனம், ராஜ அலங்கார சேவையும் நடைபெற்றது.

சொர்க்கவாசல் திறப்பு

அதைதொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட சத்தியமூர்த்தி பெருமாளை பல்லக்கில் வைத்து பக்தர்கள் தூக்கி வந்து சொர்க்கவாசல் கதவின் அருகே நிறுத்தினார்கள். சரியாக 5.30 மணிக்கு ஆழ்வார் மோட்சம் கொடுக்க பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷங்கள் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டு மலர் தூவி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பெருமாள் மேள, தளங்கள் முழங்க சொர்க்கவாசலில் நுழைந்து புஷ்ப ஊரணி வழியாக பல்லக்கில் பக்தர்கள் நடுவே ஆடி அசைந்து வசந்த மண்டபத்தை வந்தடைந்தனர். பின்னர் வசந்த மண்டபத்தை 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் தரிசனம்

இதைதொடர்ந்து பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்து சத்தியமூர்த்தி பெருமாளை தரிசனம் செய்தும், அர்ச்சனை செய்தும், துளசி மாலை சாத்தியும் வழிபட்டனர். இதில் அமைச்சர் ரகுபதி மற்றும் அரசு அலுவலர்கள், கோவில் நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் வடக்களூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீற்றிருந்த சிவயோக நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பல்லக்கில் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல் ஆவுடையார்கோவில் அருகே பரமந்தூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதையடுத்து சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் பல்லக்கில் கோதண்ட ராமர் வீதி உலா நடைபெற்றது.

விராலிமலை

விராலிமலை அருகே விராலூரில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சொர்க்கவாசலில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து காலை 10.27 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த பக்தர்கள் கோவிந்தா.... கோவிந்தா கோஷம் போட்டு அதன் வழியாக சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கீரனூர்

கீரனூர் அருகே குளத்தூர் வரதராஜ பெருமாள் கோவில், மலையடிப்பட்டி கண் திறந்த பெருமாள் கோவில், களமாவூர் சேவுக பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story