வடலூரில் புதிய அரசு கலைக்கல்லூரி திறப்பு விழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்பு
வடலூரில் நடந்த புதிய அரசு கலைக்கல்லூரி திறப்பு விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
வடலூர்,
2022-23-ம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தற்காலிக கட்டிடத்தில் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி வடலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாக தற்காலிக கட்டிடத்தில் தமிழக உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் அரசு கலைக்கல்லூரியை திறந்து வைத்தார்.
அந்த சமயத்தில் வடலூரில் நடந்த திறப்பு விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கல்லூரி கல்வி இணை இயக்குனர் (மண்டலம்) காவேரியம்மாள் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அப்போது விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வண்ணமுத்து நன்றி கூறினார்.