என்.எல்.சி. சார்பில்கேப்பர்மலையில் ரூ.84 லட்சத்தில் சுகாதார நிலைய கட்டிடம்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்
என்.எல்.சி. சார்பில் கேப்பர்மலையில் ரூ.84 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார நிலைய கட்டிடத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
நெய்வேலி,
கடலூர் கேப்பர் மலையில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் என்.எல்.சி. நிறுவனத்தி்ன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.84 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆண்கள் பிரிவுக்கான சுகாதார நிலைய கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவரும், மேலாண் இயக்குனருமான பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து என்.எல்.சி. நிறுவனம் சார்பில் தயார் செய்யப்பட்ட மேன்மையான குழந்தை வளர்ப்பு கையேடு நூலை அமைச்சர் வெளிட்டதுடன், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பணியையும் தொடங்கி வைத்தார். இதில் என்.எல்.சி. நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட தலைமை பொது மேலாளர் ராமச்சந்திரன், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு உள்பட அரசு அலுவலர்கள், என்.எல்.சி. அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அன்னவல்லி ஊராட்சி வழிசோதனை பாளையம் கிராமத்தில், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.