நகரும் ரேஷன் கடை திறப்பு விழா
75 அணக்குடி ஊராட்சியில் நகரும் ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூர் ஒன்றியம் 75அணக்குடி ஊராட்சியில் கூட்டுறவுத்துறை சார்பில் நகரும் ரேஷன்கடை திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு நாகை மாலி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு நகரும் ரேஷன் கடையை திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-நாகை மாவட்டத்தில் குடும்ப அட்டைத்தாரர்களின் குடியிருப்புக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கும் பொருட்டு, 108 நகரும் ரேஷன் கடைகள் செயல்பட ஆணை வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கீழ்வேளூர் வட்டம், இரிஞ்சியூர் கிராமத்தில் செயல்படும் ரேஷன் கடையுடன் இணைக்கப்பட்டுள்ள 75 அணக்குடி ஊராட்சியை சேர்ந்த குடும்ப அட்டைத்தாரர்கள் பயன்பெறும் வகையில் மாதத்தின் 2-வது மற்றும் 3-வது புதன்கிழமைகளில் புதிய நகரும் ரேஷன்கடை செயல்பட ஆணை வழங்கப்பட்டு, 115 குடும்ப அட்டைத்தாரர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கும் பொருட்டு, நகரும் ரேஷன்கடை திறக்கப்பட்டுள்ளது. இதை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருள் அரசு, ஊராட்சி தலைவர் கஸ்தூரி கனகரத்தினம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், ராஜகோபால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.