ரெயில்வே சரக்கு போக்குவரத்து வசதி தொடக்கம்


ரெயில்வே சரக்கு போக்குவரத்து வசதி தொடக்கம்
x
தினத்தந்தி 16 Sept 2023 3:45 AM IST (Updated: 16 Sept 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் ரெயில்வே சரக்கு போக்குவரத்து வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தேனி

சரக்கு போக்குவரத்து

தேனி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், தேனி ரெயில் நிலையத்தில் பெரிய அளவில் சரக்குகள் கையாள புதிய ரெயில்வே சரக்கு போக்குவரத்து வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சரக்கு அலுவலகம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாரம் முழுவதும் செயல்படும். இங்கு பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி மற்றும் கோக் கரி தவிர மற்ற பொருட்களை கையாள அனுமதிக்கப்படும். இது மதுரை கோட்டத்தின் 19-வது சரக்கு முனையமாகும்.

இந்த சரக்கு போக்குவரத்து அலுவலகம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ரெயில்வே சரக்கு இயக்க தகவல் அமைப்பு என்ற மென்பொருள் வாயிலாக சரக்கு பெட்டிகளை பதிவு செய்வது, வாடிக்கையாளருக்கு சரக்கு பெட்டிகளை பதிவு மூப்பு அடிப்படையில் வழங்குவது, சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது போன்ற தகவல்களை பதிவது உள்ளிட்ட செயல்களை கணிப்பொறி வாயிலாக செயல்படுத்த முடியும். மேலும் சரக்கு ரெயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது போன்ற தகவல்களை அறிவது போன்ற பணிகளை கணிப்பொறி வாயிலாக செயல்படுத்த முடியும்.

42 பெட்டிகள்

சரக்கு அலுவலக ரெயில் பாதை அருகே சரக்குகளை கையாள 650 மீட்டர் நீளமும், 16.20 மீட்டர் அகலமும் கொண்ட கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைக் காலங்களிலும் தங்கு தடை இன்றி சரக்குகளை கையாள முடியும். இங்கு ஒரே நேரத்தில் 42 சரக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலை கையாள முடியும்.

சரக்கு போக்குவரத்துக்காக தனி ரெயில் பாதை அமைப்பு உள்ளதால் பயணிகள் ரெயில் போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெற வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு, வர்த்தகர்கள் அறை, கழிப்பறை, குளியல் அறை வசதியுடன் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு தனித்தனி ஓய்வு அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சரக்குகளை லாரிகளில் விரைவாக ஏற்றிச்செல்ல தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சரக்கு நிலைய நடைமேடை உட்பட பல்வேறு நவீன வசதிகள் ரூ.5 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மதுரை-போடி மின்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சரக்குகளை ரெயில் பாதையும் விரைவில் மின்மயமாக்கப்படும். இத்தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story