மேம்படுத்தப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடக்க விழா
திருச்செந்தூரில் மேம்படுத்தப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடக்க விழா நடைபெற்றது.
திருச்செந்தூர்:
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூரில் மேம்படுத்தப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடக்க விழா நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்தார். பின்னர் முதற்கட்டமாக மாணவர்களுக்கான சேர்க்கை சான்றிதழை முதல்-அமைச்சர் வழங்கினார்.
இதையடுத்து, திருச்செந்தூரில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் மாணவர்களுக்கான பாடவகுப்புகளை தலைமை ஆசிரியர் பாலமுருகன், ஆகம ஆசிரியர் பாலசுப்பிரமணியன் குருக்கள் ஆகியோர் கற்பிக்கத் தொடங்கினர். நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நகராட்சித்தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் சங்கர், ஆய்வர் சிவலோகநாயகி, திருச்செந்தூர் கோவில் அலுவலக கண்காணிப்பாளர் சீதாலெட்சுமி, விடுதி மேலாளர் சிவநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.