அரவிந்த் கண் ஆஸ்பத்திரி புதிய கட்டிடம் திறப்பு விழா
நெல்லையில் அரவிந்த் கண் ஆஸ்பத்திரி புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
நெல்லை சந்திப்பில் கடந்த 1988-ம் ஆண்டு அரவிந்த் கண் ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டது. இந்த ஆஸ்பத்திரி வளாகத்தையொட்டி கட்டப்பட்டு உள்ள புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. அரவிந்த் கண் ஆஸ்பத்திரி மனிதவள மேம்பாட்டு துறை முன்னாள் தலைவர் டாக்டர் நாச்சியார் தலைமை தாங்கினார். ஆஸ்பத்திரி முன்னாள் தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி, நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி ஆலோசகர் டாக்டர் ராமகிருஷ்ணன், தற்போதைய ஆஸ்பத்திரி தலைவர் ஆர்.டி.ரவீந்தரன், முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் மீனாட்சி, திட்ட அலுவலரும், சென்னை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அதிகாரியுமான டாக்டர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா துணை தலைவர் நிவேதிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
அரவிந்த் ஆஸ்பத்திரியின் புதிய கட்டிடத்தில் தினமும் 2,500 முதல் 3,500 வரை வெளிநோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய முடியும். மேலும் 300 முதல் 500 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும். இங்கு வெளிநோயாளிகளுக்காக 4 சிறப்பு பிரிவுகளும் அமைக்கப்பட்டு உள்ளது. விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், அப்துல் வகாப், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.