தொடர் மழையால் கிராமத்தை சூழ்ந்த வெள்ளம்; சாலை துண்டிப்பு-மக்கள் அவதி
ஆண்டிப்பட்டி அருகே தொடர் மழையால் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. சாலை துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் அவதியடைந்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே தொடர் மழையால் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. சாலை துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் அவதியடைந்தனர்.
தொடர் மழை
ஆண்டிப்பட்டி அருகே உள்ளது, நாச்சியார்புரம் கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆண்டிப்பட்டி-தேனி சாலையில் இருந்து நாச்சியார்புரத்திற்கு செல்லும் வகையில் சாலை உள்ளது. இந்த சாலையையே அந்த கிராம மக்கள் பிரதான பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த சாலையில் முறையான வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்குவது வாடிக்கையாக உள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாச்சியார்புரத்திலும் பலத்த மழை பெய்தது. இதனால் கிராமத்தில் ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. இதற்கிடையே நேற்று இரவு ஆண்டிப்பட்டி, நாச்சியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது.
வெள்ளம் சூழ்ந்தது
குறிப்பாக நாச்சியார்புரத்திற்கு செல்லும் சாலையில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வெள்ளமாக சூழ்ந்தது. இதனால் நாச்சியார்புரம் சாலை துண்டிக்கப்பட்டது. சாலையில் 3 அடிவரை உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் கிராம மக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் தவித்தனர். அதேபோல் நாச்சியார்புரத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் சேவையும் வெள்ளம் காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவதியடைந்தனர்.
இருப்பினும் கிராம மக்கள் சாலையில் தேங்கிய வெள்ளத்தில் நடந்து சென்றனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தத்தளித்தபடி சென்று வருகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள், வயதானவர்கள் வெள்ளம் சூழ்ந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். நாச்சியார்புரம் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் கிராம மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர். எனவே வெள்ளநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.