தொடர் மழையால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கூடலூர் பகுதியில் தொடர் மழையால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்
கூடலூர் பகுதியில் தொடர் மழையால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை வறட்சி
கூடலூர் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால் வனப்பகுதி பசுமை இழந்தது. மேலும் பாண்டியாறு, மாயாறு உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும் நாளடைவில் தண்ணீர் இன்றி வறண்டது.
இதேபோன்று வறட்சி காரணமாக பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள தடுப்பணைகளிலும் தண்ணீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இதன் காரணமாக வனவிலங்குகள் மட்டுமின்றி பொதுமக்களும் குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமம் அடைந்து வந்தனர். மேலும் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டது.
தண்ணீர் வரத்து...
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை அல்லது இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.
தொடர் மழை காரணமாக கூடலூர் பகுதியில் உள்ள ஓவேலி ஆறு, பாண்டியாறு, மாயாறு, பொன்னானி ஆறு உள்பட அனைத்து நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் கூடலூர் பகுதி மக்களின் ஆதாரமாக திகழும் தடுப்பணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை முடிவுக்கு வர உள்ளது. மேலும் விவசாயத்திற்கு தேவையான பாசன நீரும் வர தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர்ந்து மழைக்கால பயிர்களை நடவு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.