நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு: மதுரையில் புதிதாக 5 பேருக்கு கொரோனா


நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு: மதுரையில் புதிதாக 5 பேருக்கு கொரோனா
x

மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 5 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை


மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 5 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசும் முக கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மதுரையிலும் அதே நிலை தான் இருக்கிறது. கடந்த வாரத்தில் மதுரையில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது தினமும் ஒரு சிலர் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

நேற்று முன்தினம் கூட, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். லேசான பாதிப்பு என்பதால் அவர் வீட்டு தனிமைப்படுத்தலில் சிகிச்சையில் இருக்கிறார்.

புதிதாக 5 பேர்

இந்த நிலையில் மதுரையில் பல்வேறு பகுதிகளில் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புடன் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 65 வயது முதியவர் தவிர்த்து இதர 4 பேரும் இளம்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் 5 பேருக்கும் கொரோனா தொற்றுக்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, வட மாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே வெளி மாநிலங்களுக்கு தொழில் நிமித்தம் சென்று வருபவர்கள், சுற்றுலா சென்று வருபவர்கள் ஆகியோர் மூலம் தமிழகத்திலும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மதுரையிலும் கொரோனா தொற்று கடந்த மாதத்தை விட தற்போது அதிகரித்து வருகிறது.

முதியவர்கள், இதய அறுவைச்சிகிச்சை உள்ளிட்ட பெரிய அளவிலான அறுவைச்சிகிச்சை மேற்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story