வெவ்வேறு இடங்களில் சம்பவம்: ரெயில் மோதி வாலிபர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு இடங்களில் ரெயில் மோதி வாலிபர் உள்பட 2 பேர் பலியானாா்கள்.
ஈரோடு ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று, இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் இறந்தவர், ஒடிசா மாநிலம் ராயகடா கொல்நரா புஜபலா பகுதியை சேர்ந்த ராஜேந்திர ஜானி மகன் சிம்மன்சல ஜானி (வயது 27) என்பதும், இவர் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் மோதி இறந்திருப்பதும் தெரியவந்தது.
இதேபோல் ஆனங்கூர் ரெயில் நிலையத்திற்கும், காவிரி ெரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, ரெயில் மோதி இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை. ஈரோடு ரெயில்வே போலீசார், இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.