தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசிய விவகாரம்: கல்லூரி மாணவர் உள்பட மேலும் 2 பேர் கைது
மண்டைக்காடு அருகே தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு அருகே தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
பெட்ரோல் குண்டுவீச்சு
மண்டைக்காடு அருகே உள்ள கருமன்கூடலை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 55), தொழில் அதிபர். இவரது வீட்டு முன்பு கடந்த 25-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வீட்டு காம்பவுண்டுக்குள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர்.
இதில் வீட்டின் முன் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. ஜன்னல் அருகே போடப்பட்டிருந்த சோபா செட்டின் பிளாஸ்டிக் கவர் எரிந்து கருகியது. ஒரு சைக்கிளும் எரிந்து சேதமடைந்தது.
தனிப்படை போலீசார்
இந்த சம்பவம் குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குளச்சல் இலப்பைவிளை பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் (27) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையிலான போலீசார் இலப்பைவிளையில் உள்ள முஸ்ஸாமில் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் போலீசார் அவரது வீட்டிலிருந்து ஒரு லேப்டாப் மற்றும் செல்போன் சிம் கார்டு உள்பட ஆவணங்களை எடுத்து சென்றனர்.
மேலும் 2 பேர் கைது
இந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்பட்ட மணவாளக்குறிச்சி ஆறான்விளையை சேர்ந்த அல்ரசிம் (22) என்ற கல்லூரி மாணவரையும், சாலத்திவிளையை சேர்ந்த கேட்டரிங் தொழிலாளி ரிஸ்வான் (27) ஆகியோரையும் மண்டைக்காடு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ஆறான்விளை முகம்மது ராபின், ஆண்டார்விளை ஆதிலிமான் ஆகியோரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.