பிரபல ஷூ தொழிற்சாலை, நிறுவனங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பிரபல நிறுவனங்களுக்கு சொந்தமான ஷூ தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர்:
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பரிதா குழுமத்துக்கு பரிதாஷூஸ், பரிதா லெதர் வார் உட்பட 11 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த குழுமம் ஷூ பெல்ட், பை உள்பட பல்வேறு தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனம் வருவாயை முறையாக கணக்கில் காட்டவில்லை என்ற புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை தொடங்கினர். சென்னை, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, புதுச்சேரி என நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலை என 32 இடங்களில் நேற்று காலை 8 மணி முதல் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
இதேபோல சென்னை நுங்கம்பாக்கத்தில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கே.எச் இந்தியா குழுமத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகளிலும் நேற்று காலை 8 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரம், வேலூர் பெருமுகை, ஆம்பூர் ஆகிய இடங்களில் இந்த குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த குழுமம் வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து இது தொடர்புடைய கடைகள் தொழிற்சாலைகள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இரவிலும் நீடித்து விடிய விடிய சோதனை நடந்தது. 2-வது நாளாக இன்றும் சோதனை நீடிக்கிறது. இந்த 2 நிறுவனங்கள் தொடர்புடைய மொத்தம் 62 இடங்களில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூரில் இன்று காலை கூடுதலாக 10 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு பல கோடி கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. சோதனையில் கைப்பற்றிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 2 குழுமங்களில் 250-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை நடந்து வரும் தோல் தொழிற்சாலைகள் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆம்பூர் உள்பட சோதனை நடந்து வரும் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.