மூணாறு தலைப்பு வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டுமானம் முழுமை பெறுமா?- பொதுமக்கள்
நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண உதவும் திட்டமாக மூணாறு தலைப்பு வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் பாலம் கட்டுமானம் முழுமை பெறாமல் உள்ளது. இதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண உதவும் திட்டமாக மூணாறு தலைப்பு வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் பாலம் கட்டுமானம் முழுமை பெறாமல் உள்ளது. இதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக நாகை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்பவர்கள் இந்த சாலையை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
திருவாரூர் தியாகராஜர் கோவில், நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குருபகவான் கோவில், வலங்கைமான் பாடை கட்டி மகாமாரியம்மன் கோவில், நாகை காயாரோகணேஸ்வரர்- நீலாயதாட்சி அம்மன் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா கோவில் என மும்மத வழிபாட்டு தலங்களை இணைக்கும் சாலையாக இந்த சாலை உள்ளது.
ரெயில்வே கேட் மூடல்
நீடாமங்கலத்தில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ரெயில் நிலையம் அருகில் ரெயில்வே கேட் உள்ளது. இதனால் நாள்தோறும் பலமுறை ரெயில்வே கேட் மூடப்படுகிறது. அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. நெடுஞ்சாலை பயணிகளின் போக்குவரத்தில் தாமதம் ஏற்படுகிறது.
இந்த நிலைக்கு நிரந்தர தீர்வு மாற்றுவழி பாதைகள் தான் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ரூ.100 கோடி ஒதுக்கீடு
கடந்தகால தி.மு.க., காங்கிரஸ் மத்திய கூட்டணி ஆட்சியில் சுற்றுச்சாலை அமைக்க முதலில் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. பின்னர் நான்கு வழிச்சாலை திட்டம் நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த போது அந்த திட்டத்தில் நீடாமங்கலம் பகுதியும் இணைக்கப்பட்டு சுற்றுச்சாலை திட்டம் கைவிடப்பட்டது.
நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் தொடங்கி நடந்து வந்தது. திருச்சி முதல் தஞ்சை வரை பணி முதலில் நிறைவடைந்தது.
இருவழிச்சாலை திட்டம்
தஞ்சை முதல் நாகை வரையிலான பணிகள் ஏதோ காரணத்தால் தேக்கம் ஏற்பட்டது. அந்த திட்டம் நிதி பற்றாக்குறை காரணமாக இருவழிச்சாலை திட்டமாக மாற்றி அறிவிக்கப்பட்டது. அந்த பணியும் முழுவதுமாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நீடாமங்கலம் பகுதியில் கோவில்வெண்ணியில் இருந்து நார்த்தாங்குடி, அபிவிருத்தீஸ்வரம், ஊர்குடி வழியாக இந்த சாலை நாகை வரை செல்கிறது.
வெண்ணாற்றில் பாலம்
இந்த நிலையில் நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் உதவும் திட்டமாக நீடாமங்கலம் அருகே மூணாறுதலைப்பு பகுதியில் பெரியவெண்ணாற்றின் குறுக்கே பன்னிமங்கலத்தையும் குருவாடி கிராமத்தையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் பாலம் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவேறாமல் உள்ளது. இந்த பாலப்பணியை விரைந்து நிறைவேற்றி போக்குவரத்தை எளிதாக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து நீடாமங்கலம் அருகே உள்ள வையகளத்தூரை விவசாய சங்க பொருளாளர் கலியபெருமாள் கூறியதாவது:-
தஞ்சையில் இருந்து நாகை வரையிலான இருவழிச்சாலை திட்டப்பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. ஆறுகளின் குறுக்கே பாலங்கள் கட்டும் பணி நிறைவடைந்தால் சாலை பணி முழுமை பெறும். குறிப்பாக நீடாமங்கலம் அருகே மூணாறுதலைப்பு பகுதியில் பெரியவெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி முழுமை பெறாமல் உள்ளது. இந்த பணியை நிறுத்தி வைக்காமல் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். நீடாமங்கலம் போக்குவரத்து நெருக்கடியை புதிய பாலம் தீர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.