கோத்தகிரியில் மான்கள் நடமாட்டம் அதிகரிப்பு


கோத்தகிரியில் மான்கள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மழையால் வனப்பகுதிகள், தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு திரும்பின. இதனால் கோத்தகிரியில் மான்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

நீலகிரி

கோத்தகிரி

மழையால் வனப்பகுதிகள், தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு திரும்பின. இதனால் கோத்தகிரியில் மான்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

உயிர்ச்சூழல் மண்டலம்

நீலகிரி மாவட்டமானது 65 சதவீத வனப்பகுதிகளுடன் முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக விளங்குகிறது. இங்குள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சீகூர், சிங்காரா, தெங்குமரஹாடா வனப்பகுதிகளில் புள்ளி மான், கடமான், சுருள் கொம்பு மான், குரைக்கும் மான் ஆகிய 4 இன மான்கள் காணப்படுகின்றன.

தற்போது மான்களை காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையோரங்களில் எளிதில் பார்க்க முடியும். இதற்கு மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே காரணம் ஆகும். இதேபோன்று கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கட்டபெட்டு பகுதியிலும், லாங்வுட் சோலை மற்றும் அதனை ஒட்டியுள்ள மிளிதேன் செல்லும் சாலையோரங்களிலும் அடிக்கடி ஏராளமான புள்ளிமான்கள் நடமாட்டம் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தென்பட்டு வருகின்றன. மேலும் கட்டபெட்டில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் பேரார், மடிதொரை, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் அடிக்கடி கடமான்களை காண முடிகிறது. மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறுத்தை மற்றும் புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பசுமைக்கு திரும்பியது

தற்போது நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்ததால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளதுடன், சலையோரங்களிலும் புற்கள் அதிகளவு வளர்ந்து காணப்படுகின்றன. எனவே அவற்றை மேய்வதற்காக புள்ளி மான்கள் மற்றும் கடமான்கள் வனப்பகுதிகளில் இருந்து வெளியே வருவதால் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி தென்பட்டு வருகின்றன.

கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா கிராமப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கடமான் ஒன்று, கடந்த ஒரு ஆண்டாக முகாமிட்டுள்ளதுடன், வனப்பகுதிக்கு திரும்பி செல்லாமல் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகளை போல சுற்றித்திரிந்து வருகிறது. இந்த கடமான் மனிதர்களை கண்டு அச்சப்படாமல் திரிந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.


Next Story