வனவிலங்குகள் பாதுகாப்பு கருதிமின்பாதையின் உயரம் அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி மின்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
வனவிலங்குகள் மின்பாதைகளுக்கு கீழே செல்லும்போது மின்விபத்து ஏற்படாமல் வனவிலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி மின்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டம் சார்பாக சிறப்பு ஆய்வு கூட்டம் வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர், வனவிலங்குகள் செல்லும் பகுதிகளில் தேவையான இடங்களில் மின்பாதைகளின் உயரத்தை அதிகரிப்பதற்கு வன அலுவலர்களுடன் இணைந்து மின்பாதைகளை ஆய்வு செய்து தேவையான இடங்களில் உயரத்தை உடனடியாக அதிகரிப்பதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதன் தொடர்ச்சியாக கல்லிடைக்குறிச்சி கோட்டம் விக்கிரமசிங்கபுரம் உபகோட்டம் பாபநாசம் கீழ் முகாம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை சேர்வலாறு அணை பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நேற்று முன்தினம் செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள், உதவி செயற்பொறியாளர் ராமகிளி ஆகியோரின் ஆலோசனைப்படி பாபநாசம் கீழ் முகாம் பிரிவு இளநிலை மின்பொறியாளர் விஜயராஜ் மேற்பார்வையில் உயரழுத்த மின்பாதையில் பூமிக்கும், மின்பாதைக்கும் இடையில் உள்ள உயரத்தை அதிகரிப்பதற்காக 11 மின்கம்பங்கள் ஏற்கனவே உள்ள 2 மின்கம்பங்களுக்கு நடுவில் புதிதாக அமைத்து பணிகள் முடிக்கப்பட்டு மின்பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டது.