பருத்தி செடியில் பூச்சி தாக்குதல் அதிகரிப்பு
மணல்மேடு பகுதியில் பருத்தி செடியில் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மணல்மேடு:
மணல்மேடு பகுதியில் பருத்தி செடியில் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பருத்தி சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு கிழாய், கேசிங்கன், பாக்கம், கொற்கை, நடுத்திட்டு, பட்டவர்த்தி, வில்லியநல்லூர், நடராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி செடியில் பூப்பூத்து காய்கள் காய்த்து பருத்தி செடி வளர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள், பருத்தியை அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் சில இடங்களில் பருத்தி செடியில் பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. பூச்சி தாக்குதலால் பருத்தி சாகுபடி பாதித்து மகசூல் குறையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உரிய விலை
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பருத்திக்கு உரிய விலை கிடைத்ததால் இந்த ஆண்டு அதிக அளவில் இப்பகுதியில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு தற்போதுவரை பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் அறுவடை செய்யப்படாமல் உள்ள ஒரு சில இடங்களில் பருத்திச் செடியில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு, செடிகள் காய்ந்து வருகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டு பருத்திக்கு செலவு செய்த பணமாவது கிடைக்குமா? என்று அச்சத்தில் உள்ளோம். இதனை வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு போதிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பருத்திக்கு உரிய விலை கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.