விசேஷ நாட்களில் காலபூஜை கட்டளை தொகை உயர்வு


விசேஷ நாட்களில் காலபூஜை கட்டளை தொகை உயர்வு
x
தினத்தந்தி 22 Jun 2023 8:45 PM IST (Updated: 23 Jun 2023 1:58 PM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் விசேஷ நாட்களில் காலபூஜை தற்காலிக கட்டளை தொகை உயர்த்தப்பட உள்ளது. இதற்கு பக்தர்கள், இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

காலபூஜை கட்டளை

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் பொது, கட்டண தரிசன வழிகளில் சென்று தரிசனம் செய்கின்றனர்.

மேலும் கோவிலில் 6 கால பூஜைகளின்போது முருகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம், அலங்காரத்தை கண்டு தரிசனம் செய்ய காலபூஜை கட்டளை முறை உள்ளது. இதற்காக பக்தர்களிடம் தொகை வசூலிக்கப்படுகிறது.

இந்த முறையில் மாலை, பரிவட்டம், பஞ்சாமிர்தம், புளியோதரை உள்ளிட்ட பிரசாதத்துடன் கூடிய கட்டளைக்கு சாதாரண நாட்களில் ரூ.900-ம், மாத சஷ்டி, கார்த்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ரூ.1800-ம் வசூலிக்கப்படுகிறது.

இதேபோல் பிரசாதம் இல்லாத கட்டளை தொகையாக சாதாரண நாட்களில் ரூ.150-ம், விசேஷ நாட்களில் ரூ.300-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இருமடங்கு உயர்வு

இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் புதிய தரிசன முறை, தரிசன கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. குறிப்பாக 'இடைநிறுத்த தரிசன முறை' அமல்படுத்துதல், 'தங்கரத புறப்பாடு' கட்டணத்தை உயர்த்துதல் தொடர்பாக பக்தர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் விசேஷ நாட்களில் காலபூஜை தற்காலிக கட்டளை தொகையை உயர்த்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது பிரசாதத்துடன் கூடிய கட்டளை தொகை ரூ.1800-ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், பிரசாதமில்லாத கட்டளை தொகை ரூ.300-ல் இருந்து ரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறும்போது, மாத சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட ஒரு ஆண்டுக்கு 52 விசேஷ நாட்களில் காலபூஜை தற்காலிக கட்டளை தொகை உயர்த்தப்பட உள்ளது என்றார்.

இந்து முன்னணி எதிர்ப்பு

பழனி முருகன் கோவிலில் தற்காலிக காலபூஜை கட்டளை தொகை உயர்த்தப்படுவதற்கு பக்தர்கள், இந்து முன்னணி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பு சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், பழனி முருகன் கோவிலில் அபிஷேக பூஜை பார்ப்பதற்கான (காலபூஜை) கட்டளை தொகை உயர்த்தப்பட உள்ளது. இது, ஏழைகளை கோவிலுக்குள் நுழைய விடக்கூடாது என்பதற்கான முன்னோட்டமாக உள்ளதா? என சந்தேகம் ஏற்படுகிறது. எனவே அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்து இலவச தரிசன முறையை அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Next Story