விருதுநகர் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
விருதுநகர் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
விருதுநகர் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
மெயின் பஜார்
வணிக நகரான விருதுநகரில் பெரு வணிக நிறுவனங்கள் முதல் சில்லரை வணிகம் செய்வோர் வரை மெயின் பஜாரில் தான் உள்ளனர். மேலும் மெயின் பஜாரை ஒட்டி தான் காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் மெயின் பஜார் வழியாக பஸ் போக்குவரத்து செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விபத்துகள் ஏற்படும் என பஸ்கள் செல்வது நிறுத்தப்பட்டது.
அப்போது மாவட்ட நிர்வாகம் விபத்துகள் ஏதும் ஏற்படாத நிலையில் பஸ்கள் மெயின் பஜார் வழியாக செல்வது ஆக்கிரமிப்புகளை தவிர்க்க உதவும் என சுட்டிக்காட்டியது. ஆனாலும் பல்வேறு அழுத்தம் காரணமாக மெயின் பஜார் வழியாக செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டது.
ஆக்கிரமிப்பு
மெயின் பஜாரின் இருபுறமும் இரு சக்கர வாகனங்கள் முதல் சரக்கு வேன்கள் வரை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. மேலும் வணிக நிறுவனங்களும் தங்களது வணிகம் தொடர்பான சாதனங்களை மெயின் பஜாரில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கும் நிலையும் உள்ளது.
அதிலும் காய்கறி மார்க்கெட் அருகே காய்கறி வாங்க வருவோரின் வாகனங்கள், காலை நேரத்தில் காய்கறி இறக்குவதற்காக வரும் வாகனங்கள் என மிகுந்த நெரிசல் ஏற்படுகிறது.ஆக்கிரமிப்புகளால் சிக்கி தவிக்கும் மெயின் பஜாரில் பொருட்கள் வாங்க வருவோரும், வாகன ஓட்டிகளும் நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
கடும் நடவடிக்கை
போக்குவரத்து போலீசார் இந்த ஆக்கிரமிப்பையும் போக்குவரத்துநெரிசலையும் தவிர்ப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளாமல் பாராமுகமாகவே உள்ளனர்.
எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் மாவட்ட தலைநகரான விருதுநகரில் வணிக நிறுவனங்கள் அதிகம் இடம் பெற்றுள்ள மெயின் பஜாரில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஆக்கிரமிப்புகளை தவிர்க்க உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி ஆக்கிரமிப்பு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து மெயின் பஜார் பொதுமக்களின் வணிக தேவைகளுக்கு மட்டும் பயன்படும் வகையில் மாற்றுவது அவசியம் ஆகும். அதே நேரத்தில் வணிக நிறுவனங்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.