கோவில் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.4 ஆயிரமாக உயர்வு -அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
கோவில் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை,
ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் நிதி வசதியற்ற 15 ஆயிரம் கோவில்கள் பயன்பெற்று வருகின்றன. இத்திட்டம், கூடுதலாக 2 ஆயிரம் நிதி வசதியற்ற கோவில்களுக்கு இவ்வாண்டு விரிவுபடுத்தப்படும். இதற்காக அரசு மானியமாக ரூ.30 கோடியும், பொதுநல நிதியாக ரூ.10 கோடியும் வழங்கப்படும். 2 ஆயிரம் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்க தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
ஓய்வூதியம் உயர்வு
துறை நிலையிலான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம். இது ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த பணியாளர் இறந்து விட்டால் அவரின் வாரிசுதாரருக்கு மாதந்தோறும் ரூ.1,500 குடும்ப மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500-லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் கொடையாக ரூ.1,000 வழங்கப்படும். கோவில்கள் மூலம் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்கள் பணி அனுபவம் பெற ஏதுவாக கோவில்களில் மூத்த அர்ச்சகர்களின் கீழ் பணி அனுபவம் பெற வாய்ப்பு அளித்து ரூ.6 ஆயிரம் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஓலைச்சுவடிகளில் உள்ள விவரங்களை மின்பதிப்பு செய்யவும், பழங்கால மூலிகை சுவரோவியங்களை பாதுகாக்கும் பொருட்டும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் ஆய்வு மையம் ஒன்று ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
ரோப்கார் வசதி
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ரூ.12.05 கோடி மதிப்பீட்டில் புதிய கம்பிவட ஊர்தி (ரோப்கார்) அமைக்கப்படும். திருநீர்மலை அரங்கநாதப் பெருமாள் கோவிலில் ரூ.8.17 கோடி மதிப்பீட்டில் புதிய கம்பிவட ஊர்தி அமைக்கப்படும்.
சென்னை, மயிலாப்பூர், முண்டகக் கண்ணியம்மன் கோவிலுடன் இணைந்த திருவள்ளுவர் கோவிலுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருச்செந்தூர் கடலில் மாற்றுத்திறனாளிகள் தீர்த்தமாட கடற்கரையில் சிறப்பு நடைபாதை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் அமைக்கப்படும்.
ஆன்மிக சுற்றுலா
ஆன்மிகப் பயணம் பக்தர்கள் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு 300 நபர்கள் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.75 லட்சத்தை அரசு ஏற்கும்.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித தலங்களுக்கு முதன்முறையாகச் செல்லும் பயனாளிகளுக்கு 500 நபர்கள் வீதம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2.50 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் இவ்வாண்டு முதல் மானசரோவர் புனிதத் தலத்திற்கு முதன்முறையாக ஆன்மிகப் பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு இதுவரை வழங்கி வந்த அரசு மானியம் தலா ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும் முக்திநாத் புனிதத் தலத்திற்கு முதன்முறையாக ஆன்மிக யாத்திரை செல்லும் 500 பக்தர்களுக்கு இதுவரை வழங்கி வந்த அரசு மானியம் தலா ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ஆகும் செலவு ரூ.1 கோடியினை அரசே ஏற்கும்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் வட்டம், நெம்மேலி, ஆளவந்தர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டப்படும்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 632 கோவில்களுக்கு ரூ.128 கோடி மதிப்பீட்டில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
வட மாநிலங்களில் மட்டும்தான் ரூ.300 கோடி செலவில் திருக்கோயில் பெருந்திட்டப்பணிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் தற்போது தமிழகத்தில் பெருந்திட்டப்பணிக்கு, திருச்செந்தூரில் ரூ.324 கோடி, பெரியபாளையத்தில் ரூ.170 கோடி, திருவேற்காட்டில் ரூ.63 கோடி, சமயபுரத்தில் ரூ.62 கோடி என்று திருப்பணி தொடர்கிறது.
இலவச திருமணம்
கட்டணமில்லாத திருமணங்களை 4.12.2022 அன்று 31 ஜோடிகளுக்கு முதல்-அமைச்சர் நடத்தி வைத்தார். இந்த திட்டத்திற்கு ஒரு இணைக்கு ரூ.20 ஆயிரம் செலவிடப்பட்டது. தற்போது அந்தத் தொகை ஒரு ஜோடிக்கு ரூ.50 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது.
நிலம் மீட்பு
ரூ.18 கோடி மதிப்பீட்டில் 31 புதிய திருத்தேர்கள் உருவாக்கும் பணியும், ரூ.4 கோடி மதிப்பீட்டில் 13 திருத்தேர்களுக்கான மராமத்துப்பணியும் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை ரூ.4,262 கோடி மதிப்புள்ள 4,578 ஏக்கர் பரப்புள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் ரூ.3,819 கோடி மதிப்புள்ள 3,177 ஏக்கர் நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
அன்னதானம்
முதல்-அமைச்சர் உத்தரவின்படி, அன்னதான திட்டம் அனைத்து தரப்பு மக்களின் பசிப்பிணி போக்குகிறது. 756 கோவில்களில் ஒருவேளை அன்னதானம், 8 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம், 15 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம், பழனிக்கு திருவிழா காலங்களில் பாதயாத்திரையாக வரும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்,
இவ்வாறு அவர் பேசினார்.
249 அறிவிப்புகள்
அமைச்சர் சேகர்பாபு நேற்று 249 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். கிரிக்கெட் வீரர்கள் சதம் அடிப்பதுபோல், புதிய அறிவிப்பில் அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து இரண்டு சதங்களையும், ஒரு இரட்டை சதத்தையும் அடித்துள்ளார்.
அதாவது, 2021-22-ம் ஆண்டு மானிய கோரிக்கையின்போது 112 அறிவிப்புகளையும், 2022-23-ம் ஆண்டில் 165 அறிவிப்புகளையும், 2023-24-ம் ஆண்டுக்கு (நடப்பு நிதி ஆண்டு) 249 அறிவிப்புகளையும் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார்.
அறிவிப்புகளை வெளியிடுவதோடு நிறுத்தாமல், அவற்றை செயல்படுத்துவது தொடர்பான தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.