தமிழகத்தில் தனிநபர் வருமானம் அதிகரிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
தமிழகத்தில் தனிநபர் வருமானம் அதிகரித்து இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சென்னை,
தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜி.எஸ்.டி.பி.) குறித்த கணிப்பை தமிழ்நாடு அரசின் பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை தயாரித்துள்ளது. அதுபற்றி சென்னையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:-
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களின் உற்பத்தி மதிப்பு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த புள்ளி விவரங்களை கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கான உற்பத்தி மதிப்பை தமிழக பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை கணித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு நிதியாண்டு காலத்தில் நடைபெற்ற உற்பத்திகளின் மதிப்பை, நடப்பு விலையின் அடிப்படையிலும் நிலைத்த விலையின் அடிப்படையிலும் புள்ளியியல் துறை கணக்கிடுகிறது. இந்த கணிப்பு முறை மூலம் பிற மாநில வளர்ச்சி விவரங்களோடு நமது மாநிலத்தின் வளர்ச்சி போக்கை அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் தமிழகத்தின் உற்பத்தி மதிப்பு 2021-2022-ம் ஆண்டில் நிலைத்த விலை (கடந்த 10 ஆண்டுகளில் இருந்த விலையின்படி) ரூ.13 லட்சத்து 43 ஆயிரத்து 287 கோடியாகவும், நடப்பு விலை ரூ.14 லட்சத்து 53 ஆயிரத்து 321 கோடியாகவும் இருந்தது.
விலைவாசி அளவு
2021-22-ம் ஆண்டில் நடப்பு விலையில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதாரமாகவும் நிலைத்த விலையில் 3-வது பெரிய பொருளாதாரமாகவும் திகழ்கிறது. இதில், 2022-23-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் நிலையை மற்ற மாநிலங்களின் உற்பத்தி மதிப்பீடுகளுடன் ஒப்பிட்டு அறிவிக்கப்படும். தமிழகத்தின் பொருளாதாரம் 2021-22-ம் ஆண்டில் நிலைத்த விலையில் 7.92 சதவீதத்திலும் 2022-23-ம் ஆண்டில் 8.19 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளது.
அதுபோல, மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 2021-2022-ம் ஆண்டில் நிலைத்த விலையில் 8.19 சதவீதமாகவும், நடப்பு விலையில் 15.84 சதவீதமாகவும் இருந்தது. இது 2022-2023-ம் ஆண்டில் முறையே 7.9 சதவீதமாகவும், 14.8 சதவீதமாகவும் உள்ளது.
தமிழ்நாட்டில் விலைவாசி அளவு மத்திய அரசை விட குறைவாக உள்ளது. பணவீக்க குறியீட்டு எண் மாநில அளவில் 2021-22-ம் ஆண்டில் 7.92 சதவீதமாகவும், 2022-23-ம் ஆண்டில் 5.97 சதவீதமாகவும் காணப்பட்ட நிலையில், மத்திய அளவில் இக்குறியீட்டு எண் முறையே 9.31 சதவீதம் மற்றும் 8.82 சதவீதமாகவும் உயர்ந்து காணப்பட்டது.
கொரோனா தொற்று காலத்தில் மாநிலத்தின் வளர்ச்சி குன்றியது. அதற்கு முந்தைய 2 ஆண்டுகளில் (நடப்பு விலையில்) மாநிலத்தின் வளர்ச்சி 2018-19-ம் ஆண்டில் 7.01 சதவீதமாகவும் 2019-20-ம் ஆண்டில் 3.25 சதவீதமாகவும் இருந்தது. தொற்றுக்கு பிந்தைய 2 ஆண்டுகளில் வளர்ச்சி உயர்ந்து 7.92 சதவீதமாகவும், 8.19 சதவீதமாகவும் காணப்படுகிறது.
தனிநபர் வருமானம் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் (நிலைத்த விலையில்) 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில் முறையே ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 557 என்றும்; ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 727 என்றும் இருந்தது. இதன்மூலம் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது.
இந்திய அளவில் அது ரூ.92 ஆயிரத்து 583 என்றும் ரூ.98 ஆயிரத்து 374 என்றும் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக சராசரியாக 8 சதவீதம் என்ற அளவில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது.
கடன் மதிப்பு
தமிழகம் மின்னணு ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது. இரண்டரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடுகள் வந்துள்ளன. தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் பின்தங்கியுள்ளது. உற்பத்தி துறை பெரிய அளவில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் செல்போன் உற்பத்தி, ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
பொருளாதாரத்தில் நாம் மராட்டியத்தை தாண்ட வேண்டும். அது இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த 7, 8 ஆண்டுகளிலாவது தாண்ட வேண்டும் என்பது தமிழகத்தின் பெருமுயற்சி.
கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் மத்திய அரசு வகுத்துள்ள ஒட்டுமொத்த உற்பத்தி குறியீட்டின் அளவில்தான் இந்த கடன் மதிப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.