கத்தரிக்காய் கிடுகிடு விலை உயர்வு
திண்டுக்கல் உழவர்சந்தையில் கத்தரிக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
திண்டுக்கல்-திருச்சி சாலையில் என்.ஜி.ஓ. காலனியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல், நத்தம், வடதுரை, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த மழை காரணமாக விவசாயிகளின் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த கத்தரிக்காய் செடிகள் மழைநீரில் மூழ்கின. இதனால் அந்த செடிகளில் இருந்த பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து விட்டன. அதன் காரணமாக கத்தரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டது. விளைச்சல் குறைந்ததால் திண்டுக்கல் உழவர் சந்தைக்கு கத்தரிக்காய் வரத்தும் வெகுவாக குறைந்து போனது. இதன் காரணமாக அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை ஒரு கிலோ பச்சை கத்தரிக்காய் ரூ.50-விற்பனை ஆனது. ஆனால் நேற்று கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 100 கிலோவுக்கு மேல் விளைச்சல் இருக்கும். ஆனால் மழை காரணமாக ஏக்கருக்கு 30 கிலோ மட்டுமே தற்போது கத்தரிக்காய் விளைச்சளாகியுள்ளது. இதனாலேயே உழவர் சந்தையில் கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும் சாகுபடி செலவை ஒப்பிடும்போது இந்த விலை எங்களுக்கு கட்டுப்படியாகவில்லை" என்றனர்.
சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்றான கத்தரிக்காய் விலை ஒரு கிலோ ரூ.100-ஆக உயர்ந்ததை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.