பீட்ரூட் கொள்முதல் விலை உயர்வு
கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் பீட்ரூட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் பீட்ரூட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மலைக்காய்கறிகள் சாகுபடி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் புரூக்கோலி, சுகுனி, சல்லாரை போன்ற இங்கிலீஷ் காய்கறிகளையும் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது மலைக்காய்கறிகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
இந்தநிலையில் தற்போது கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யபட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
லாபம் கிடைக்கும்
இதுகுறித்து எரிசிபெட்டா பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை, விதை மற்றும் இடுபொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வங்கிகளில் இருந்து கடன் பெற்று, காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம். தற்போது மலை காய்கறிகளின் கொள்முதல் விலை சற்று உயர்ந்து வருகிறது. தற்போது பீட்ரூட்டுக்கு போதுமான கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் கணிசமாக லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.