உருளைக்கிழங்கு கொள்முதல் விலை உயர்வு


உருளைக்கிழங்கு கொள்முதல் விலை உயர்வு
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி

ஊட்டி, ஜன.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காய்கறி சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பூண்டு, பீன்ஸ் போன்ற மலை காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் விவசாயிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

அங்கு மொத்த வியாபாரிகள் காய்கறிகளை ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு விளையும் உருளைக்கிழங்கு ஊட்டி மார்க்கெட், மேட்டுப்பாளையம் மண்டிகளில் ஏல மூலம் விற்பனை செய்யப்பட்டும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

விலை அதிகரிப்பு

கடந்த வாரம் வரை ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.30 வரை விற்பனையாகி வந்தது. தற்போது கிலோவுக்கு ரூ.15 அதிகரித்து, ரூ.45 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயி வினோதன் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ் கிலோ ரூ.5-க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக முட்டைகோஸ்களை அறுவடை செய்வதற்கு கிலோவுக்கு ரூ.5 வரை செலவாகும்.

கடந்த வாரம் 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1,000 முதல் ரூ.1,200-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பொங்கல் அன்று அதிகபட்சமாக ரூ.2,200-க்கு மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு விற்பனை செய்யப்பட்டது. நீலகிரியில் விளையும் உருளைக்கிழங்கை ஒரு மாதத்திற்கு மேல் வைத்து பயன்படுத்தலாம் என்பதால், நீலகிரி உருளைக்கிழங்கு அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டதால் விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு சில வாரங்கள் நீடிக்கும் என தெரிகிறது. இதன் மூலம் மற்ற காய்கறிகளால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டி விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story