அனந்தபுரி உள்ளிட்ட ரெயில்களின் வேகம் அதிகரிப்பு


அனந்தபுரி உள்ளிட்ட ரெயில்களின் வேகம் அதிகரிப்பு
x

வருகிற 7-ந் தேதி முதல் அனந்தபுரி உள்ளிட்ட ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மதுரை


வருகிற 7-ந் தேதி முதல் அனந்தபுரி உள்ளிட்ட ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அனந்தபுரி எக்ஸ்பிரஸ்

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை-மணியாச்சி, மணியாச்சி-தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட நெல்லை-நாகர்கோவில் இடையே இரட்டை அகலப்பாதை பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து, அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கோவில்பட்டி-கொல்லம் ரெயில் பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து மதுரை, நாகர்கோவில் வழியாக கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16823) வருகிற 7-ந் தேதி முதல் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக கோவில்பட்டியை கடந்து சென்ற பின்பு இன்னும் வேகம் அதிகரிக்கப்படுவதாக இருக்கிறது.

இந்த ரெயில் நெல்லையில் இருந்து அதிகாலை 6.50 மணிக்கு பதிலாக 6.35 மணிக்கு புறப்படும். நாங்குநேரியில் இருந்து காலை 7.18 மணிக்கு பதிலாக 7.04 மணிக்கும், வள்ளியூரில் இருந்து காலை 7.30 மணிக்கு பதிலாக காலை 7.17 மணிக்கும், ஆரல்வாய்மொழியில் இருந்து காலை 7.50 மணிக்கு பதிலாக காலை 7.39 மணிக்கும், நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.40 மணிக்கு பதிலாக காலை 8.12 மணிக்கும், இரணியலில் இருந்து காலை 9 மணிக்கு பதிலாக 8.27 மணிக்கும், குழித்துறையில் இருந்து காலை 9.18 மணிக்கு பதிலாக காலை 8.45 மணிக்கும் புறப்படும். இந்த ரெயில் கொல்லம் ரெயில் நிலையத்துக்கு பகல் 11.45 மணிக்கு பதிலாக 11.40 மணிக்கு சென்றடையும்.

பாசஞ்சர் ரெயில்

அதேபோல, நெல்லை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06642) வருகிற 7-ந் தேதி முதல் நெல்லையில் இருந்து காலை 6.35 மணிக்கு பதிலாக காலை 7.10 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் நாங்குநேரியில் இருந்து 7.40 மணிக்கும், வள்ளியூரில் இருந்து காலை 7.53 மணிக்கும், வடபணகுடியில் இருந்து காலை 8.04 மணிக்கும், காவல்கிணறு ரெயில் நிலையத்தில் இருந்து 8.10 மணிக்கும், ஆரல்வாய்மொழியில் இருந்து 8.22 மணிக்கும் புறப்பட்டு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு காலை 9 மணிக்கு சென்றடையும்.

அம்ரிதா எக்ஸ்பிரஸ்

மதுரையில் இருந்து பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சூர் ரெயில் நிலையத்தில் இருந்து வேகம் அதிகரிக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் (வ.எண்.16344) மதுரையில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்பட்டு திருச்சூரில் இருந்து நள்ளிரவு 11.15 மணிக்கு பதிலாக இரவு 10.38 மணிக்கு புறப்படுகிறது. திருவனந்தபுரம் ரெயில் நிலையத்துக்கு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு சென்றடைகிறது.


Related Tags :
Next Story