கோத்தகிரி பகுதியில் புள்ளிமான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-வாகனங்களை கவனமாக இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தல்
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புள்ளி மான்கள் அடிக்கடி தென்பட்டு வருவதுடன் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புள்ளி மான்கள் அடிக்கடி தென்பட்டு வருவதுடன் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
புள்ளிமான்கள் அதிகரிப்பு
நீலகிரி மாவட்டமானது 65 சதவீத வனப்பகுதிகளுடன் முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக விளங்குகிறது. இங்கு உள்ள வனப்பகுதிகளில் புலி, காட்டு யானை, சிறுத்தை, செந்நாய், கரடி, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் புலி, செந்நாய், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளைக் காண்பது அரிதாக உள்ளது. ஆனால் மான் இனங்களை மட்டும் அவ்வப்போது காண முடிகிறது.
முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சீகூர், சிங்காரா, தெங்குமரஹடா வனப்பகுதிகளில் புள்ளி மான், கடமான், சுருள் கொம்பு மான், குரைக்கும் மான் ஆகிய 4 இன மான்கள் காணப்படுகின்றன. இந்தியாவிலேயே பெரிய மான் இனமாக கடமான் கருதப்படுகிறது. மேலும் சுருள் கொம்பு மான்கள், குரைக்கும் மான்கள் பொதுமக்களை கண்டாலே கண்ணிமைக்கும் நேரத்தில் வனப்பகுதிக்குள் ஓடி மறையும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் மான்களை எளிதில் பார்க்க முடியும். இதற்கு மான்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டு வருவதே காரணம் ஆகும்.
பசுமைக்கு திரும்பியது
இதேபோல கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கட்டபெட்டு பகுதியிலும், லாங்வுட் சோலை மற்றும் அதனை ஒட்டியுள்ள மிளிதேன் செல்லும் சாலையோரங்களில் அடிக்கடி ஏராளமான புள்ளிமான்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தென்பட்டு வருகின்றன. மேலும் கட்டபெட்டில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் பெரார், மடிதொரை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் அடிக்கடி கடமான்களைக் காண முடிகிறது. மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்ததால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளதுடன், சாலையோரங்களிலும் புற்கள் அதிகளவு வளர்ந்து காணப்படுகின்றன. எனவே கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி புள்ளி மான்கள் தென்பட்டு வருகின்றன. இவற்றின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்து வருவதால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- வன விலங்குகள் மற்றும் மான்கள் இரவு நேரங்களில் சாலைகளில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.