சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து டிரைவர்கள் போராட்டம்
தூத்துக்குடியில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டண உயர்வு
நாடு முழுவதும் மத்திய அரசு நேற்று முதல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடி உள்பட 22 சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.60 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவதுடன் விலைவாசியும் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது.
இந்த கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடி முன்பு நேற்று அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவை சார்பில் போராட்டம் நடந்தது.
கண்டன கோஷம்
மாநில அமைப்பு செயலாளர் பட்டாணி, மாவட்ட பொறுப்பாளர் பரமசிவம் ஆகியோர் தலைமை தாங்கினார். தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் 6 மாதங்களுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் இதனால் விலைவாசி உயரவும் வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக சுங்க கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் டிரைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.