கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி
கெலவரப்பள்ளி அணையில் மதகுகள் புனரமைக்கும் பணிக்காக அதிக அளவில் தண்ணீர் திறப்பதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் மதகுகள் புனரமைக்கும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக கிருஷ்ணகிரி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அதன்படி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 638 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 202 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் கெலவரப்பள்ளி திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதனால், நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,551 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.60 அடியாக உள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 1,425 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நெடுங்கல் தடுப்பணை வழியாக சீறி பாய்ந்து செல்கிறது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.