கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு:சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை
கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தேனி மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
இந்நிலையில் கடந்த 25-ந்தேதி அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானல் பகுதியில் திடீரென கனமழை பெய்தது. இதனால் அருவிக்கு நீர்வரத்து கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. சிறிது நேரத்தில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் தண்ணீரில் சிக்கி தவித்தனர். இதையடுத்து உடனே வனத்துறையினர் விரைந்து வந்து சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
இதைதொடர்ந்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி சீரானது. இதனால் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். ஆனால் தற்போது வார நாட்கள் மற்றும் பள்ளிகளில் தேர்வு நடைபெறுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. அவர்கள் அருவியில் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர். இதற்கிடையே மாலை 6 மணி அளவில் நீர்வரத்து அதிகரித்ததால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.