பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை பகுதியில் 68.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை பகுதியில் 68.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறையில் 68.8 மி.மீ. மழை

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில் தற்போது கடந்த 5 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக பேச்சிப்பாறை பகுதியில் 68.8 மில்லி மீட்டர், குழித்துறை பகுதியில் 39 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை சாரல் மழை பெய்தது. பின்னர் வானில் கார் மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. மதியத்திற்கு பிறகு அவ்வப்போது வெயிலும் தென்பட்டது.

விவசாயிகள் நிம்மதி

2½ மாதமாக போதிய மழை பெய்யாததால் கடைமடை பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகும் அபாயத்தில் இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை விவசாயத்திற்கு கைகொடுக்கும் அளவில் உள்ளது. இதனால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தொடர் மழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரப்படி பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பெருஞ்சாணி-19.2, சிற்றார் 1- 12.4, சிற்றார் 2- 9.2, முக்கடல் அணை- 6.2, மாம்பழத்துறையாறு- 10, பூதப்பாண்டி- 9.8, களியல்- 10, கன்னிமார்- 5.8, கொட்டாரம்- 8.2, நாகர்கோவில்- 8.2, மயிலாடி- 5.4, புத்தன்அணை- 17.6, சுருளகோடு- 33.6, தக்கலை- 6.2, குளச்சல்- 8.2, இரணியல்-23 பாலமோர்- 37.2, திற்பரப்பு- 15.2, கோழிப்போர்விளை- 6.2. அடையாமடை- 8.1, ஆனைகிடங்கு- 7.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 656 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று வினாடிக்கு 1007 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 583 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதே போல நேற்றுமுன்தினம் பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 547 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று 572 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கால்வாய்களுக்கு 'ஷிப்ட்' முறையில் திறந்து விடப்படுகிறது.


Next Story