வேட்டங்குடி பறவைகள் சரணாலய கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வேட்டங்குடி பறவைகள் சரணாலய கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பத்தூர்,
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வேட்டங்குடி பறவைகள் சரணாலய கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பறவைகள் சரணாலயம்
திருப்பத்தூரில் இருந்து மதுரை நெடுஞ்சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வேட்டங்குடி கிராமம். இங்குள்ள கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் ஆண்டுதோறும் சீசன்காலங்களில் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து அடைகாத்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம். கடந்த 1977-ம் ஆண்டு இப்பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி மறு ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பறவைகள் வந்து செல்லும் சீசன் காலமாகும். இந்த காலக்கட்டத்தில் இந்த பகுதியில் அதிகளவு மழை பெய்வதால் கண்மாய் முழுவதும் தண்ணீர் நிரம்பி பறவைகளுக்கு ஏற்ற சீசனாக இருக்கும்.
வெளிநாட்டு பறவைகள்
அவ்வாறு ஆண்டுதோறும் இந்த சரணாலயத்திற்கு ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட 217 வகையான சுமார் 2 ஆயிரம் பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்து விட்டு திரும்புகிறது.
பொதுவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பருவ மழை பெய்ய தொடங்கிய பின்னர் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இங்குள்ள கண்மாய்கள் நிரம்ப தொடங்கும். அதன் பின்னர் தான் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் இங்கு வரத்தொடங்கும்.
சீசன் தொடங்குவதற்கு முன்பு
இந்தாண்டு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் இங்குள்ள கண்மாய்கள், குளங்கள், ஊருணிகள் நிரம்பி வருகிறது. இதில் சில கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழைகாரணமாக இந்த பறவைகள் சரணாலயத்தில் உள்ள கண்மாய் வேகமாக நிரம்பி வருகிறது. இதையடுத்து இந்தாண்டும் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக பறவைகள் இங்கு வரத்தொடங்கும் என இப்பகுதி மக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.