பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
x

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

தேனி

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். விவசாயிகள் பேசும் போது கூறியதாவது:-

மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பருத்தி பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாய நிலங்களை உழவு மற்றும் கவாத்து செய்திட எந்திரங்கள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பல நவீன எந்திரங்கள் வந்துள்ளதால் அவற்றையும் தேனி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாங்கி வாடகைக்கு கொடுக்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். அணைக்கரைப்பட்டி பகுதியில் விவசாய நிலங்களுக்கு சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளதால் அங்கு பாலம் அமைக்க வேண்டும்.

ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள 30 கண்மாய்களுக்கும் தண்ணீர் நிரப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டி பகுதியில் உள்ள கண்மாய் கரை மழையால் உடைப்பு ஏற்பட்டுள்ளதை சரிசெய்ய வேண்டும். வருசநாடு பகுதியில் தினமும் 10 முறைக்கு மேல் மின்தடை ஏற்படுவதால் அரசு புறம்போக்கு நிலத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். கண்ணக்கரையில் இருந்து சொக்கனலை கிராமத்துக்கு தார்சாலை அமைக்க வேண்டும்.

பணிகளில் அலட்சியம்

கால்நடைகளுக்கு பரவும் கோமாரி நோய்களை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கொடுவிலார்பட்டி, பள்ளப்பட்டி பகுதியில் உள்ள ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்றி பலன் தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும். அம்பாசமுத்திரம், பாலகிருஷ்ணாபுரம் கண்மாய்களுக்குள் வனத்துறையினர் நடவு செய்த கருவேல மரங்களை அகற்ற வேண்டும். மாவட்டத்தில் நில அளவையர்கள் பலரும் நில அளவை பணிகளுக்கு வருவது இல்லை. அளவீடு பணிகளில் அலட்சியமாக இருக்கின்றனர்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் முரளிதரன் அறிவுறுத்தினார். மேலும் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள், கடந்த கூட்டங்களில் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்தா, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா, பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story