நிதானம் தவறிய பயணத்தால் விபத்து-உயிரிழப்பு அதிகாிப்பு


நிதானம் தவறிய பயணத்தால் விபத்து-உயிரிழப்பு அதிகாிப்பு
x

சாலை விதிகளை காற்றில் பறக்க விட்டு, நிதானம் தவறிய பயணத்தால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்

ஆதி மனிதன் உணவு தேடி புறப்பட்டதே முதல் மனித பயணம் ஆகும். அந்த முதல் பயணத்துக்கு மனிதன் வாகனத்தை எதிர்பார்த்திருக்க மாட்டான். பசி எனும் அக்னி அடிவயிற்றில் பற்றி எரிய மனம் வசதியை தேடாததால், உணவை தேடி கால்நடையாக பயணித்தான்.

நவீன வசதிகளுடன் வாகனங்கள்

உணவு தேடி புறப்பட்ட மனிதனின் பயண பட்டியல் பின்னாளில் நீண்டு கொண்டே சென்றது. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் பயணம் ஏராளம். விலங்கோடு, விலங்காக நடந்து சென்ற மனிதன் வசதிக்காக விலங்கையே வாகனமாக மாற்றினான். தொடக்கத்தில் மாடு, குதிரை, கழுதை, எருமைகளின் மீது அமர்ந்து பயணம் செய்தான்.

சக்கரத்தை கண்டு பிடித்ததும் வண்டிகள் தயாரித்து அதில் மாடு, குதிரையை பூட்டி வசதியாக பயணம் செய்ய முடிந்தது. வெளியூருக்கு செல்வதற்கு மாட்டு வண்டிகளில் நாள் கணக்கில் மக்கள் பயணித்தனர். இதற்கிடையே அதிசயிக்க வைத்த அறிவியல் வளர்ச்சியால் விதவிதமான வாகனங்கள் உருவாகின.

இதில் தனி மனிதன் பயணம் செய்வதற்கு சைக்கிள், மொபட், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், குடும்பமாக செல்வதற்கு கார், வேன், பஸ், ரெயில் மற்றும் விமானம் என்று பல வகையான வாகனங்கள் பெருகிவிட்டன. இந்த வாகனங்களும் நவீன வசதிகளுடன் விதவிதமாக விற்பனைக்கு வருகின்றன.

சாலை விதிகள் மீறல்

வேலைக்கு செல்வோர் மட்டுமின்றி, 5 வீடுகள் தள்ளி இருக்கும் கடைக்கு செல்பவர்கள் கூட இருசக்கர வாகனத்தை பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அந்த அளவுக்கு வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால் வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

மனிதர்கள் வாகனங்களில் நெரிசல் இல்லாமல் சிரமமின்றி, விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு சாலை விதிகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் ஓட்டுனர் பயிற்சி பெறும் போதும், வாகன ஓட்டுனர் உரிமம் வாங்கும் போதும் மட்டுமே பலருக்கு சாலை விதிகள் நினைவில் இருக்கின்றன.

வாகனங்களில் ஏறி அமர்ந்ததும் சாலை விதிகள் மறந்து ஜெட் விமானம் ஓட்டுவது போன்ற நினைப்பு வந்துவிடுகிறது. இதனால் குடிபோதை, அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், அதிக ஆட்களை ஏற்றி செல்லுதல், லாரிகளில் சரக்குகளின் மேல் ஆட்களை அமர வைத்தல், வளைவில் முந்தி செல்லுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னல் செய்யாமல் திரும்புதல் என சாலை விதிகள் மீறல் அதிகரிக்கிறது.

விபத்துக்கான காரணம்

இதன் விளைவாக சாலை விபத்துகள் நடப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வாகனங்கள் பெருகி விட்டதால் நெரிசல் இல்லாமல் பயணிக்க நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. அந்த அகலமான சாலையிலும் கவனக்குறைவு, முந்தி செல்லும் ஆவல் ஆகியவற்றால் விபத்தில் சிக்கி கொள்வது வேதனை அளிக்கிறது. வேகமாக சென்றால் தான் வாகனம் ஓட்டுவதற்கே அர்த்தம் எனும் மனநிலையில் பலர் உள்ளனர்.

எனவே நான்கு வழிச்சாலையில் மட்டுமின்றி கிராம சாலைகளில் கூட சர்வ சாதாரணமாக விபத்துகள் நடக்கின்றன. இரு பஸ்கள் எளிதாக விலகி செல்லும் சாலையில் கூட, இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி கொள்வது மிகவும் கொடுமையானது. நிதானம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி செல்வதே விபத்துக்கு காரணமாகி விடுகிறது.

உடல் உறுப்புகள் இழப்பு

இவ்வாறு விதிகளை மீறும் பயணம் செய்வோரால், சாலையில் முறையாக செல்வோரும் துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கி கொள்வது நடக்கிறது. எனவே விபத்தை ஏற்படுத்தும் நபர் மட்டுமின்றி பிறரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. நொடி பொழுதில் நிகழும் விபத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளை இழப்பவர்கள் ஏராளம்.

இதுமட்டுமின்றி கோர விபத்துகளால் விலை மதிப்பு இல்லாத உயிரை பறிகொடுத்தவர்களும் உள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்களின் குடும்பம் பெரும் துயரத்துக்கு உள்ளாகிறது. பல குடும்பங்களை வறுமை வாட்டி வதைப்பதற்கு விபத்துகளும் காரணமாக இருக்கின்றன.

இதனால் சாலை விபத்துகளை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாதந்தோறும் மாவட்ட அளவில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனித்தனியாக சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்மூலம் விபத்து பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் சாலை விதிகளை மதிக்காத நபர்களால் விபத்துகள் நடப்பது தொடர்கிறது.

திண்டுக்கல் மாவட்டம்

தமிழகத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாக இருக்கிறது. தமிழகத்தின் தென்பகுதியின் நுழைவு வாயிலாக திகழ்வதால் வாகன போக்குவரத்து மிகுந்த மாவட்டமாக இருக்கிறது. இதனால் விபத்துகளும் கணிசமாக நடக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2021-ம் ஆண்டில் மொத்தம் 1,751 சாலை விபத்துகள் நடந்துள்ளன. ஆனால் கடந்த 2022-ம் ஆண்டில் 1,976 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இது 2021-ம் ஆண்டை விட 225 விபத்துகள் அதிகம் ஆகும். இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டில் 519 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்து உள்ளனர்.

ஆனால் 2022-ம் ஆண்டில் 653 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டை விட 2022-ம் ஆண்டில் பலியானவர்களில் 134 பேர் அதிகம் ஆகும். இது மற்ற மாவட்டங்களை விட குறைவு என்றாலும் திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து இருக்கிறது.

துயரத்தில் குடும்பம்

அவ்வாறு உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர் துயரத்தில் இருந்து மட்டுமின்றி பொருளாதாரத்திலும் மீண்டு வருவது கடினம். பூமியில் மனித பிறப்பு மிகவும் அரிதானது. அத்தகைய அரிய பிறப்பை வீணடிக்காமல் தனக்கும், குடும்பத்தினருக்கும், சமுதாயத்துக்கும் பயன்படும் வகையில் வாழ வேண்டும்.

இதற்கு வாகனத்தை ஓட்டுவதில் நிதானமாக இருப்பதோடு, சாலை விதிகளை கடைபிடிப்பது அவசியம். தனக்கும், பிறருக்கும் தொல்லை தரும் வகையில் வாகனத்தை ஓட்டுவதை தவிர்ப்போம். அழகிய உலகில் இனிய வாழ்வை வாழ்வோம்.

==========


Next Story